Datta Vratam for Progeny (Tamil)

குழந்தை வரம் அருளும் தத்தாத்ரேயர் விரதம்

குழந்தை வரம் அருளும் தத்தாத்ரேயர் விரதம்

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தத்தாத்ரேயர்- சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக தோன்றிய சிறப்புமிகுந்த அவதாரம். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம் இருந்தது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணம் கொண்ட இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.

ஒரு நாள் நாரதர் தன் கையில் இரும்பு குண்டு சிலவற்றை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். ‘தேவியர்களுக்கு என் வணக்கம். தாயே இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதை களால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்’ என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.

இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், ‘நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது’ என்றனர்.

‘இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்திய மாகும்’ என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது.

இதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.

அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப் பெரும்தேவர்களும், ‘நீங்கள் நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.

சற்று திகைத்தாலும், தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப் பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.

அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

அதற்கு அனுசுயா, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.

இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments

Popular posts from this blog

Guru charitra concise version - Chapters 33 & 34!

Guru Charitra - Concise version - Chapters 21 & 22

Guru charitra Concise version chapters 27 & 28